search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டையில் கொள்ளை"

    புதுக்கோட்டை அருகே நகை வியாபாரியை காரில் கட்டிப்போட்டு விட்டு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்த அவர், கே.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் இருந்து 92 பவுன் பழைய நகைகளை வாங்கினார். மேலும் பழைய நகைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணம் அவருக்கு கிடைத்தது.

    வியாபாரம் முடிந்ததும் நேற்றிரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். புதுக்கோட்டை கே.புதுப்பட்டி அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் செல்லும் போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் , விக்னேஷின் காரை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    அதற்குள் அந்த கும்பல் விக்னேசை சுற்றி வளைத்து பிடித்ததோடு, அவர் வைத்திருந்த நகை-பணத்தை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்து கூச்சலிடவே, 4 பேரும் சேர்ந்து விக்னேஷின் வாயை துணியால் பொத்தினர்.

    மேலும் கை-கால்களை கயிற்றால் கட்டி காருக்குள் போட்டு விட்டு, விக்னேஷ் வைத்திருந்த 92 பவுன் நகை மற்றும் ரூ.1.82 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும்.

    இதனிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் நடுரோட்டில் கார் தனியாக நிற்கவே, அதற்குள் யார் இருக்கிறார் என்று பார்த்த போது, விக்னேஷ் கட்டி போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை பொதுமக்கள் மீட்டதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கே. புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் மர்மநபர்கள் சிக்கவில்லை. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான நபர்கள் சிக்கவில்லை.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷிற்கு தெரிந்த நபர்களே இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று புதுக்கோட்டைக்கு நகை வியாபாரம் செய்ய வந்ததை நோட்டமிட்ட நபர்கள், அவர் ஊருக்கு புறப்பட்டு செல்வதை அறிந்து, நகையை பறித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×